இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ இன்று பதவி பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.
அநுராதபுரம் ருவன்வெலி மகா சாய பௌத்த விஹாரை வளாகத்தில் இந்த பதவி பிரமாண நிகழ்வு முற்பகல் 10 மணியளவில் நடைபெறவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவரும், கோட்டாபய ராஜபக்ஷவின் சகோதரருமான மஹிந்த ராஜபக்ஷவின் 74ஆவது பிறந்தநாள் நிகழ்வுகளுடன் இந்த பதவி பிரமாணம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவி பிரமாண நிகழ்வுக்கு முன்னர் கோட்டாபய ராஜபக்ஷ, பௌத்தர்களின் புனித தலங்களாக ருவன்வெலி மகா சாய மற்றும் ஸ்ரீமகா போதி ஆகிய விஹாரைகளுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.
பதவி பிரமாண நிகழ்வின் பின்னர் புதிதாக தெரிவாகியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முதல் தடவையாக நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தவுள்ளார்.
- இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ - யார் இவர்?
- இலங்கை ஜனாதிபதி தேர்தல்: வடக்கு, கிழக்கு மக்களின் பெருமளவு ஆதரவைப் பெற்ற சஜித்
இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், இராஜீயத்துறை அதிகாரிகள், வெளிநாட்டு தூதுவர்கள், சமயத் தலைவர்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
ருவன்வெலி மகா சாய விஹாரை
இலங்கையில் மன்னராட்சி காலத்தில் தலைநகரமாக விளங்கிய அநுராதபுரத்தில் இருந்த பௌத்த விஹாரையாக ருவன்வெலி மகா சாய விளங்குகின்றது.

புத்த பெருமான் ஞானம் பெற்றதாக நம்பப்படும் வெள்ளரசு மரம் அநுராதபுரத்திலுள்ள ஸ்ரீமகாபோதி விஹாரையிலேயே உள்ளது.
இந்த ஸ்ரீமகாபோதி மற்றும் ருவன்வெலி மகா சாய ஆகிய விஹாரைகள் இரண்டு ஒன்றுடன் ஒன்று இணைந்தே காணப்படுகின்ற பின்னணியில், இந்த விஹாரைகள் பௌத்த மதத்தை பின்பற்றுவோர் மத்தியில் மிகவும் நம்பிக்கை வைக்கக்கூடிய புனித ஸ்தலங்களாக விளங்குகின்றன.
இந்த விஹாரையுடன் சீமமாலக்க என்ற கட்டிடமொன்று அமைந்துள்ள அதேவேளை, குறித்த கட்டிடத்தின் ஒரு பக்கம் 400 அடி நீளமானதுடன், அதில் ஒரு பக்கத்தில் மாத்திரம் 40 தூண்கள் வரிசையாக அரசர்கள் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த கட்டடமானது 1600 தூண்களுடன் அமைக்கப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த கட்டிடமாகத் திகழ்கிறது.