இலங்கை ஜனாதிபதியான கோட்டாபய: இந்தியா- இலங்கை உறவு இனி எப்படி இருக்கும்

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தேர்வுசெய்யப்பட்டிருக்கும் நிலையில், இலங்கையில் சிறுபான்மையினரின் எதிர்காலம், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல், இந்தியா - இலங்கை உறவு ஆகியவை குறித்து ஃப்ரண்ட்லைன் இதழின் அசோசியேட் எடிட்டரும் மூத்த பத்திரிகையாளருமான ஆர்.கே. ராதாகிருஷ்ணிடம் பேசினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன். பேட்டியிலிருந்து:


கேள்வி: நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றிருக்கிறார். இந்தத் தேர்தல் முடிவுகள் சொல்வதென்ன?


தில்: கடந்த ஏப்ரலில் அங்கு குண்டுவெடிப்புகள் நடந்தபோதே, அங்கு யார் ஜெயிக்கப்போகிறார்கள் என்பது தீர்மானமாகிவிட்டது. மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரை, கடந்த 2009ல் புலிகளை வெற்றிகொண்டதிலிருந்து, தேசப் பாதுகாப்பு என்ற விஷயம் என்பதில் அவரைத் தவிர வேறு யாராலும் உரிமை கொண்டாட முடியாத விஷயமாகவே இருந்தது.


ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் குண்டுவெடிப்புகள் நடந்தன. 27ஆம் தேதியே கோட்டாபய தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துவிட்டார். அப்போது அவருடைய கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனகூட இதை முடிவுசெய்யவில்லை. மே மாதம் நான் மஹிந்தவைச் சந்தித்தபோதுகூட அவர் இதனை உறுதிப்படுத்தவில்லை.


ஆனால், கோட்டாபய ஏப்ரலிலேயே பணிகளைத் துவங்கிவிட்டார். கோட்டாபய பாதுகாப்புத் துறை செயலராக இருந்தவர். போரை வழிநடத்தியவர். ஆகவே ஏப்ரல் 21க்குப் பிறகு இந்த விஷயம்தான் மக்களின் மனதில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதைக் காண முடிகிறது. அதே நேரத்தில் பொருளாதாரப் பிரச்சனைகளும் பெருகிவந்தன. அதனால், தற்போதைய அரசைச் சேர்ந்த யாரும் வெல்ல முடியாத சூழலும் உருவானது